உடைந்த பேனாவின் சுயசரிதை – ஒரு பேனாவின் வாழ்க்கை வழியாக உணர்வு, பாசம், அலட்சியம் ஆகியவற்றை கூறும் மனதை உருக்கும் தமிழ் கட்டுரை.
அன்றொரு நாள் திங்கட்கிழமை நானும் எனது நண்பர்களும் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஓர் அழுகுரல் ஒன்று கேட்டது. நானும் எனது நண்பர்களும் விளையாடுவதை நிறுத்திவிட்டு அழுகுரல் கேட்ட திசையை நோக்கி நடந்து சென்றோம். நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அழுகுரல் மிக அருகில் கேட்பது போன்று தோன்றியது. நானும் எனது நண்பர்களும் அழுகுரல் கேட்ட திசையை நோக்கி செல்லும் பொழுது பெரிய அடர்ந்த மரங்கள் வளர்ந்த காடு ஒன்று தென்பட்டது.
அழுகுரல் கேட்ட திசை
நாம் அந்தக் காட்டின் அருகே சென்ற பொழுது அழுகுரல் எம்மை நெருங்குவது போன்று தோன்றியது. எனது நண்பர்கள் அந்தப் பற்றைக்குள் வருவதற்கு மிகவும் பயந்தார்கள். நான் அவர்களை சமாதானம் செய்து அழுகுரல் கேட்ட அந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றேன். நாம் செல்ல செல்ல அழுகுரல் மிக அருகில் கேட்டது. நானும் எனது நண்பர்களும் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தோம். ஆனால் அழுகுரல் கேட்கும் இடத்தினை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.
திடீரென்று நண்பர்களே என்ற ஒரு குரல் கேட்டது குரல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்த பொழுது பற்றைக்குள் உடைந்த பேனா ஒன்று அழுது கொண்டு நின்றது நாம் அதன் அருகில் சென்றதும் என்ன ஆச்சரியம் தனது அழுகையை நிறுத்தி கதைக்கத் தொடங்கியது.

பேனாவின் கதை
நான் தான் பேனா. நான் இந்தியாவில் உள்ள பெரிய தொழிற்சாலை ஒன்றில் உருவாகினேன். என்னை மட்டுமல்லாது என்னைப் போன்ற பல நண்பர்களையும் உருவாக்கினார்கள். எங்களை உருவாக்குவதற்கு பல தொழிலாளர்கள் சேர்ந்து எம்மை உருவாக்கினார்கள். எங்களை பல வண்ண நிறங்களில் அதாவது சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கருப்பு ஆகிய விதவிதமான நிறங்களிலும் வடிவங்களில் எம்மை உருவாக்கினார்கள். நானும் எனது நண்பர்களும் அத தொழிற்சாலையில் மிக மகிழ்ச்சியாக இருந்தோம்.
ஒரு நாள் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அங்குள்ள தொழிலாளிகள் எங்களை கப்பல் வழியாக இலங்கை நாட்டிற்கு கொண்டு செல்ல போவதாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். இதை கேட்ட எங்களுக்கு மிகவும் பயமாக இருந்தது. பின்னர் எங்களுக்கு கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றியது இதனால் நானும் எனது நண்பர்களும் கப்பலில் செல்ல போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தோம்.
கப்பல் பயணம்
ஒன்றாக இருந்த என்னையும் எனது நண்பர்களையும் பெட்டிக்குள் வைத்து அடைத்தார்கள். பெட்டிக்குள் எங்களை அடைத்தது உள்ளே இருட்டாக காணப்பட்டது. நாங்கள் அனைவரும் இருட்டைக் கண்டு பயந்தோம். பின்னர் எங்கள் எல்லோரையும் துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். ஒவ்வொரு பெட்டிகளாக எங்களை கப்பலில் ஏற்றினார்கள்.
பெட்டிக்குள் இருந்ததால் எங்களால் கடல் பயணத்தை பார்த்து ரசிக்க முடியவில்லை என்ற கவலை இருந்தது. ஆனால் கப்பல் ஆடி அசைந்து செல்வதை எங்களை எங்களால் உணர முடிந்தது.
இலங்கை வந்ததும்
சில மணித்தியாலங்கள் சென்றதும் கப்பலில் இருந்த ஒருவர் இலங்கை வந்துவிட்டது என்று கூறியது எங்களது காதுகளில் கேட்டபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். பின்னர் கப்பலில் இருந்த எங்களை கீழே இறக்கி வைத்தவுடன் அங்கே எங்களை வாங்குவதற்காக பல வியாபாரிகள் காத்துக் கொண்டு நின்றார்கள்.
என்னையும் எனது நண்பர்களையும் பிரித்து ஒவ்வொரு வியாபாரிகளிடம் கொடுத்தார்கள். நானும் எனது நண்பர்களும் பிரிவை தாங்காது அழுதுகொண்டே அவ் வியாபாரிகளுடன் சென்றோம்.
கடையில்
என்னையும் எனது நண்பர்கள் சிலரையும் வாங்கிய வியாபாரி எங்களை தன்னுடைய கடைக்கு கொண்டு சென்றார். பின்னர் எங்களை பெட்டிக்குள் இருந்து எடுத்து கடையில் மிக அழகாக உங்களை அடுக்கி வைத்தார். நாங்கள் பல வர்ண நிறங்களில் காணப்பட்டதால் எங்களுக்கே எம்மை பார்க்கும்போது மிகவும் அழகாக காட்சியளித்தோம்.
வீதியால் செல்பவர்கள் எங்களை கண் இமைக்காது பார்த்துச் சென்றது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
சிறுவனின் வாழ்க்கையில்
ஒரு நாள் தாத்தா ஒருவர் தனது பேரனுடன் நாங்கள் இருக்கும் கடைக்கு வந்தார். அவர் தனது பேரனின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக கடைக்கு அழைத்து வந்திருந்தார். என்ன வேண்டும் என கேட்ட பொழுது பேரன் என்னை கைகாட்டினான்.
தாத்தாவும் பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு என்னை வாங்கி தனது பேரனிடம் கொடுத்தார். அவனும் என்னை வாங்கிய சந்தோஷத்தில் பாடசாலைக்கு கொண்டு சென்றான்.
நான் எனது நண்பர்களை பிரிந்து வந்தது எனக்கு கவலை அளித்தாலும் அந்த சிறுவனின் கைகளில் நான் இருப்பதை விட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவன் என்னை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டான். தனது நண்பர்களுக்கு என்னை காட்டி மகிழ்ச்சி அடைந்தான். ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தினை என்னை பயன்படுத்தி மிக அழகாக எழுதினான். எழுதி முடித்ததும் என்னை பத்திரமாக மூடி வைத்தான்.
வலி நிறைந்த முடிவு
அன்றொரு நாள் பாடசாலையில் கொடுத்த வீட்டுப் பாடத்தினை செய்வதற்காக என்னை வெளியில் எடுத்து ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடத்தினை என்னை பயன்படுத்தி மிக அழகாக செய்து முடித்துவிட்டு என்னை மறந்து அந்த இடத்திலேயே வைத்துவிட்டு நித்திரைக்கு சென்று விட்டான்.
அன்றிரவு அவன் வளர்த்த சிறிய நாய்க்குட்டி ஒன்று என்னை கண்டது. அது விளையாட்டாக வந்து என் உடலை கடித்து சிதைத்தது. நான் நான் வலி தாங்க முடியாமல் கத்தினேன். ஆனால் சிறுவனோ வெளியில் வந்து என்னை பார்க்கவில்லை. எனது உடலால் இரத்தம் வடிந்த வண்ணமே காணப்பட்டது. நான் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தேன்.
காலை விடிந்ததும் சிறுவன் பாடசாலைக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். புத்தகப் பையை அடுக்கும் பொழுது என்னைத் தேடினான். பின்னர் தான் வீட்டுப் பாடம் செய்த இடத்தில் வந்து என்னை பார்த்த போது நான் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அவன் அழத்தொடங்கினான். அவனை அவனது பெற்றோர்களும் தாத்தாவும் சமாதானப்படுத்தினார்கள்.
அவன் அழுது முடிந்ததும் என்னை தூக்கி இப்பற்றைக்குள் எறிந்து விட்டான். நான் அன்று முதல் இன்று வரை இப்பற்றைக்குள் இருந்து அழுது கொண்டே இருக்கின்றேன். என்று தனது கதையைக் கூறி முடித்தது.
எங்களின் உணர்வு
நானும் எனது நண்பர்களும் பேனா கூறிய கதையைக் கேட்டு அழுது கொண்டிருந்தோம். பின்னர் இருட்டி விட்டதால் பேனாவிற்கு நாம் ஆறுதல் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றோம். ஆனால் வீட்டுக்கு சென்ற என்னால் எனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
நான் அழுவதை கண்ட எனது அம்மா என்ன நடந்தது என்று கேட்டார். நான் நடந்த எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் அம்மாவிற்கு கூறினேன். அம்மா அக்கதையைக் கேட்டு எனக்கு ஆறுதல் கூறி என்னை சமாதானப்படுத்தினர். பின்னர் சோகத்தில் அம்மாவின் மடியில் படுத்து உறங்கி விட்டேன்.
