நான் பார்த்து ரசித்த கடற்கரை காட்சி என்ற சிறுவர் கட்டுரை கடலின் அழகு, இயற்கை காட்சிகள் மற்றும் குழந்தையின் அனுபவத்தை எளிமையாக விளக்குகிறது.
அன்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை விடுமுறை. நானும் தம்பியும் எனது அப்பாவுடன் சேர்ந்து கடற்கரையை ரசிப்பதற்காக சென்றோம். அங்கு சென்றவுடன் என்னால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. எனது தம்பி கடற்கரையை கண்டவுடன் அங்குமிங்கும் ஓடி கத்திச் சத்தமிட்டான். அங்கே எங்களைப் போல பல சிறுவர்கள் கடற்கரையை ரசிப்பதற்காக வந்திருந்தனர். அவர்களும் மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் விளையாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்து ரசித்தேன்.
நான் கடற்கரைக்கு அருகில் இருந்தபோது சூரிய ஒளிக் கதிர்கள் கடல் நீரின் மீது பிரதிபலித்தது. இதனால் கடல் நீர் சிவப்பு நிறம் போல் தோற்றமளித்தது. இதை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சூரியன் ஆனது மெல்ல மெல்ல கடலுக்குள் மறைவது போல தென்பட்டது. நானும் தம்பியும் சூரியன் மறைவதை பார்த்துக்கொண்டே இருந்தோம்.
வானம் ஆனது கடலோடு முட்டுவது போன்று காட்சியளித்தது. இதுவும் பாப்போர் மனங்களில் புத்துணர்ச்சியை ஊட்டியது. இது மாலை நேரம் என்பதால் வானம் ஆனது சூரிய மறைவையொட்டி செக்கச் சிவந்த வானமாகக் காட்சியளித்தது. பறவைகளும் வானத்தின் இடையே பறந்து சென்று சூரியனை வட்டமடிப்பது போன்று தென்பட்டது.
கடற்கரையில் இருக்கும் பொழுது அங்கு வீசிய காற்றானது தென்றல் காற்று வீசுவது போன்று குளிர்ச்சியாகக் காணப்பட்டது. காற்று எமது மேனியில் படும்பொழுது எங்களது உடல் சிலிர்த்துப் போனது. அங்கு வந்த சிறுவர்கள் மீதும் தென்றல் காற்று வருடிச் சென்றது.அச்சிறுவர்களும் தென்றல் காற்று வருடிச் சென்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதுமட்டுமன்றி கடற்கரையில் பல தென்னை மரங்களும் காணப்பட்டன. அதைவிட முருங்கைக் கற்ப் பாறைகளும் காணப்பட்டன. அப்பொழுது அங்கு வரும் கடலலைகள் பாறைக் கற்களின் மீது பட்டு எங்கள் மீதும் நீர்துளிகள் பறந்தன. நானும் தம்பியும் கடல் அலை நீர்த் துளியில் நனைந்து விட்டோம்.
நான் எனது தம்பியின் கைகளை கோர்த்துக்கொண்டு கடல் அலையின் கிட்டே சென்றோம். அப்பொழுது கடலில் இருந்து மிகவும் வேகமாக அலை வந்து கொண்டிருந்தது. அந்த அலை எனது கால்களையும் தம்பியின் கால்களையும் நினைத்துச் சென்றது. கடல் நீர் எமது கால்களில் பட்ட பொழுது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் மீண்டும் கடல் அலைகள் எமது கால்களை தொட்டு விட்டு சென்றது. இதை நாம் ரசித்துக் கொண்டிருந்தோம். எங்களுடன் அங்கு வந்த சிறுவர்களும் தமது கால்களை நனைப்பதற்காக வந்திருந்தனர். அவர்களின் கால்களையும் கடல் அலைகள் தொட்டு விட்டுச் சென்றன. இக்காட்சியை பார்க்கும் பொழுது எங்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அப்பொழுது அங்கிருந்த சிறுவர்கள் கடற்கரையில் உள்ள மணலை பயன்படுத்தி அழகான பெரிய வீடுகள் கட்டிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த நானும் எனது தம்பியும் கடற்கரையில் எனக்குப் பிடித்த மாதிரியான ஒரு அழகான வீட்டைக் கட்டினோம். நாங்கள் கட்டிய வீட்டினை அப்பாவிற்கும் காட்டி மகிழ்ந்தோம்.

அப்பொழுது திடீரென கடலில் இருந்து பெரிய அலை ஒன்று கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த அலை நாங்கள் கட்டிய வீட்டை கரைத்துச் சென்றது நாங்கள் கட்டிய வீடு மட்டுமன்றி ஏனைய சிறுவர்கள் கட்டிய வீட்டையும் கரைத்துக் கொண்டு சென்றது. எனது தம்பி வீட்டைக் காணவில்லை என்று அழத் தொடங்கினான். நான் அவனுக்கு சமாதானம் கூறிவிட்டு மீண்டும் வீட்டை கட்ட தொடங்கினோம்.
பின்னர் கடலின் தூரத்தே பெரிய படகு ஒன்று வருவதைக் கண்டோம். நாம் அப்படகை பார்த்துக் கொண்டே இருந்தோம். நேரம் செல்லச் செல்ல படகானது கடற்கரையை நோக்கி வந்தது. அப்பொழுது படகில் இருந்து பல மீனவர்கள் கரை இறங்கினார்கள். அவர்கள் இறங்கும் பொழுது அவர்களைச் சுற்றி பல பெண்கள் மீன் வாங்குவதற்காக கூடைகளை வைத்துக்கொண்டு அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டு நின்றார்கள். படகிலிருந்து விதம் விதமான பெரிய மீன்கள் காணப்பட்டன.
நானும் தம்பியும் அவ் மீன்களைக் கண்டவுடன் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. பெரிய மீன்களில் இருந்து சிறிய மீன்கள் வரை காணப்பட்டது. மீன்கள் மட்டுமல்லாது இறால், கணவாய், நண்டு போன்றவையும் காணப்பட்டன. அப்பொழுது ஒரு மீனவன் கூடைக்குள் இருந்த நண்டுகளை மணலில் கொட்டினான். நான் நண்டை பார்ப்பதற்காக அருகில் சென்ற பொழுது அதற்குள் பல நண்டுகள் உயிருடன் இருந்தன. நான் அந்த நண்டை கையால் தொடும்பொழுது நண்டு தனது இரண்டு கால்களாலும் எனது கையை பற்றி பிடித்தது. நான் வலியால் கத்தத் தொடங்கினேன். எனது அழுகைச் சத்தம் கேட்டதும் அப்பா அங்கே ஓடி வந்து விட்டார். பின்னர் நண்டிடமிருந்து எனது கையை மீட்டு அதனை தொடாதவாறு அருகில் இருந்து பார்க்குமாறு கூறினார்.
நானும் தம்பியும் மீன்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ஒவ்வொரு மீன்களுக்கும் ஏலம் கூறி மீன்கள் விற்கப்பட்டன. மீன்களை வாங்குவதற்கு பல வியாபாரிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் ஏலம் கூறும்போது தமக்குத் தேவையான மீன்களை ஏலம் கூறி பெற்றுக் கொண்டார்கள். தாம் ஏலம் கூறிப் பெற்றுக் கொண்ட மீன்களை கொண்டு வந்த பெட்டிக்குள் போட்டு கட்டிக்கொண்டு தமது வியாபாரத்திற்காக புறப்பட்டார்கள்.
ஏனைய மீன்களை அங்கு வந்தவர்கள் அவ் மீன்களுக்குரிய விலைகளைக் கொடுத்து மீன்களை வீட்டிற்கு வாங்கிச் சென்றார்கள். அப்பொழுது எனது அப்பாவும் அதில் எங்கள் வீட்டுக்கு தேவையான மீன்களை வாங்கினார். அப்பா வாங்கிய மீனை என்னிடம் தந்தார். நான் அந்த மீனை வாங்குவதற்கு முதலில் பயப்பட்டேன். பின்னர் அந்த மீனை வாங்கி கையில் வைத்திருந்தேன்.
அப்பா என்னையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு பலூன் விற்கும் வியாபாரியிடம் எங்களை கூட்டிச் சென்றார். அங்கே பலூன்கள் பல வண்ண நிறங்களில் காணப்பட்டன. ஒவ்வொரு பலூன்களும் மிகவும் அழகாக காணப்பட்டன. எனக்கும் தம்பிக்கும் பலூன் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அப்பாவிற்கு தெரியும். அதனால் அவர் எங்களுக்கு பலூன்கள் வாங்கித் தந்தார். நானும் தம்பியும் பலூன்களை கொண்டு விளையாடினோம்.
ஒரு பலூன் கடற்கரையில் வீசிய காற்றின் வேகத்தில் பலூன் பறந்து கடலுக்குள் சென்று விட்டது. கடலுக்குள் சென்றதும் பலூன் கடல் நீரில் மீது மிதந்து சென்றது. இக் காட்சியைப் பார்க்கும் பொழுது நீண்டு விரிந்த கடலின் மீது சிறிய பந்து ஒன்று மிதந்து செல்வது போன்று காட்சியளித்தது.
இருளத் தொடங்கிவிட்டது இதனால் அப்பா வீட்டுக்கு போவோமா? எனக் கேட்ட பொழுது எங்களுக்கு கடற்கரையை விட்டு செல்வதற்கு மனம் வரவில்லை. இருந்தாலும் இருட்டி விட்டதால் நானும் எனது தம்பியும் அப்பாவுடன் வீட்டிற்கு புறப்பட்டோம். அப்பொழுது அங்கு வந்திருந்த ஏனைய சிறுவர்களும் தமது தாய் தந்தையர்களுடன் வீட்டுக்கு சென்றார்கள்.
