இந்த தைப்பொங்கல் கட்டுரையில் தமிழ் மரபின் அதி உன்னதமான தைப்பொங்கல் நிகழ்வு எப்போது எப்படி கொண்டடாப்படுகின்றது பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது. தைப்பொங்கலினை உழவர் திருநாள், தைத்திருநாள் என்று அழைப்பார்கள். தைப்பொங்கல் ஆனது தை முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
இத் தைப்பொங்கலினை இலங்கை மக்கள் , இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்கள், ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். சூரியனானது தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் நாளானது தைப்பொங்கல் ஆகும்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிப்பதை மகர சங்கராந்தி என்றும் என் அழைப்பார்கள். அதனால் தைப்பொங்கலையும் மகர சங்கராந்தி என்று அழைப்பார்கள். மேலும் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் காலத்தினை உத்தராயண காலம் என அழைப்பார்கள்.

இத் தைப்பொங்கலினை சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடப்படுகின்றது. அது மட்டுமின்றி உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த விலங்கிற்கும் நன்றி கூறும் முகமாக கொண்டாடப்படுகின்றது. தை முதலாம் தேதி புத்தரிசியிலே பொங்கி சூரியனுக்கு படைத்து நன்றி செலுத்துவது இப்ப பண்டிகையின் மிக முக்கியமான நோக்கமாகும். தைப்பொங்கலினை உழவர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்”, என்பது ஆன்றோர் வாக்கு. அதன்படி ஆடியில் விதைத்த நெல்லினை மார்கழி மாதம் வீட்டிற்கு கொண்டுவந்து புதிர் எடுத்த நெல்லினை பொங்கி சூரிய கடவுளுக்கு படைத்து அதனை குடும்பத்தாருடன் உண்டு மகிழ்வது இதன் சிறப்பாகும்.
அதாவது தமது வயலில் விளைந்த நெல்லின் முதல் அறுவடையை சூரியனுக்கு படைக்க வேண்டும் என்பது அவர்கள் சூரியனுக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும். தமது நெல்லின் விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்த சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்துதல் தைப்பொங்கல் பண்டிகையாக கருதப்படுகின்றது.
தைப்பொங்கல் கொண்டாடும் முறை
தைப்பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்து நீராடுதல். பின்னர் வீட்டு முற்றத்தின் முன்னே கோலம் இடுதல். நிறைகுடத்தை வைத்து பிள்ளையாரை எழுந்தருளச் செய்தல். பின்னர் அடுப்பில் மஞ்சள் இலை, இஞ்சி இலை, மாவிலை என்பதை சேர்த்து கட்டிய பானையை வைத்து அதில் புத்தரிசினை இட்டு பொங்குதல்.
மேலும் பொங்கிய பொங்கலினை சூரியன் உதயத்தின் போது சூரியனுக்கு பால், இளநீர், கரும்பு, பழங்கள் என்பவற்றையும் சேர்த்து சூரியனுக்கு படைத்து வணங்குதல். பின்னர் படைத்து முடித்ததும் அப்பொங்கலினை குடும்பத்தோடு சேர்ந்து அனைவரும் உண்டு மகிழ்தல் ஆகும்.
பட்டி பொங்கல்
தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இது உழவர்கள் தமது வீட்டில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி அதற்கு பட்டுத் துணிகளை கட்டி மாலைகளை அணிவித்து அழகு பார்த்தல். பின்னர் மாட்டுக்கு முன்னே பொங்கலினை பொங்குதல்.
பொங்கிய பொங்கலை மாட்டிற்கு படைத்து அதை மாடு சாப்பிடுவதற்கு கொடுத்தல். இவ்வாறு செய்வதன் மூலம் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த மாட்டிற்கு உழவர்கள் செய்யும் நன்றிக் கடன் ஆகும். அன்றைய தினம் கால்நடைகளை தெய்வத்துக்கு நிகராக போற்றி வழிபடுவார்கள். இது காலம் காலமாக நிகழ்ந்து வருகின்ற ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகின்றது.
போகிப் பண்டிகை
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப இப்போகி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இது அதிகமாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகின்றது. அதாவது இப்ப பண்டிகையை இலங்கை மக்கள் கொண்டாடுவதில்லை. ஆனால் இந்திய மக்கள் மார்கழி மாதம் 31ம் தேதி அல்லது மார்கழி கடைசி நாள் இப்ப பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அதாவது தமது வீட்டில் உள்ள தாம் பாவித்த தேவையற்ற பொருட்களை வீட்டில் சேர்க்காது போகிப் பண்டிகை என்று அதனை வெளியில் போட்டு கொளுத்துதல் போகிப் பண்டிகை ஆகும். இது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இப்ப பண்டிகை வருடத்தின் கடைசி நாள் அன்று மக்களால் கொண்டாடப்படுகின்றது. இது கொண்டாடப்படுவதன் நோக்கம் என்னவென்றால் தை பிறக்கப் போகின்றது இதனால் பழையதை அகற்றி புதியவற்றை வாங்கி வீடுகளை செழிப்பாக்குதலே இதன் நோக்கமாகும்.
தைப்பொங்கல் விளையாட்டுகள்
தைப்பொங்கல் அன்று அல்லது தைப்பொங்கலை முன்னிட்டு கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு காளையை அடக்குதல் போன்ற வீர விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டு காளை அடக்குதல் நிகழ்வானது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு போன்ற கிராமங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இவ் வீர விளையாட்டானது தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றுகின்ற ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. அது மட்டுமன்றி தமிழர்களின் வீர கலாச்சாரங்களையும் எடுத்துக்காட்டுவதாக அமைவதோடு, உலக நாடுகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை உலகெங்கும் எடுத்துச் சொல்வதாக இவ் விளையாட்டு அமைகின்றது.
மேலும் இத் தைப்பொங்கலினை தேசிய பொங்கல் விழாவாகவும் கருதப்படுகின்றது. அதாவது வேற்று மத மக்களும் தைப்பொங்கலினை கொண்டாடுகின்றனர். அதாவது கிறிஸ்தவ மக்கள், முஸ்லீம் மக்கள் தைப்பொங்கல் அன்று பொங்கல் பொங்கி அறுசுவை கறியுடன் பொங்கலினை உண்ணுவது வழக்கமாக காணப்படுகின்றது.
அன்றைய நாள் அன்று மாமிசத்தை உண்பதை அவர்கள் தவிர்த்து இருப்பதையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த தைப்பொங்கலினை தேசிய பொங்கல் விழாவாக நாடு பூராகவும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியான விடையமாகும்.
தைப்பொங்கல் கொண்டாடுவதனால் கிடைக்கும் நன்மைகள்
- தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதனால் எமது உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றது
- தைப்பொங்கல் கொண்டாடுவதன் மூலம் எமது சமயத்தின் கலாச்சார அம்சங்களை பற்றி எம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது.
- இப் பண்டிகையின் மூலம் நாம் உணவினை பகிர்ந்து உண்ணும் பண்பு அதாவது மற்றவர்களுக்கு கொடுத்து உண்ணுகின்ற வழக்கம் ஏற்படுகின்றது.
- தைப்பொங்கல் கொண்டாடுவதன் மூலம் நாம் ஒற்றுமையாக வாழ்வது தொடர்பாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
- இப் பண்டிகையின் போது சூரியனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் எம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை எம்மால் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
- அத்துடன் அன்பு, கருணை, இரக்கம், உயிர்கள் மீது அன்பு செலுத்துதல் போன்ற நற்பண்புகளை பண்டிகையில் மூலம் கற்றுக் கொள்ள முடிகின்றது.
தைப்பொங்கல் பண்டிகையானது இந்து மத மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பண்டிகையாக காணப்படுகின்றது. இப்பண்டிகையானது தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பற்றி மிகவும் அறியக்கூடியதாக உள்ளது. இப் பண்டிகையைக் கொண்டாடுவது ஏர் பிடித்து உழவுத் தொழில் செய்கின்ற விவசாயிகளை சார்ந்தது.
மேலும் இப் பண்டிகை கொண்டாடுவது எமது கலாச்சாரத்தினை மேலும் வலுவூட்டுவதாக காணப்படுகின்றது. நாமும் எமது சமுதாயமும் பண்புடன் வாழ்வதற்கு இது வழி அமைத்துக் கொடுக்கின்றது. எனவே இத் தைப்பொங்கலினைக் கொண்டாடி சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
