சரிந்து விழுந்த ஆலமரத்தின் சுயசரிதை மனித வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், பொறுமை, தியாகம் மற்றும் நிலைத்தன்மையை உணர்த்தும் ஆழமான கட்டுரை.
நானும் எனது அக்காவும் பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஓர் அழுகை குரல் கேட்டது. நானும் அக்காவும் சத்தத்தை கேட்டு பயந்தோம். பின்னர் எங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு அழுகுரல் கேட்ட திசையை நோக்கி நடந்து சென்றோம். நாங்கள் நடந்து செல்ல செல்ல அழுகுரல் எம்மை நெருங்கியது.
அழுகுரல் எம்மை நெருங்கும் போது எனக்கு மேலும் பயம் தோன்றியது. நான் எனது அக்காவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன். அப்பொழுது எங்களை நோக்கி சிறுவர்களே என்ற ஒரு குரல் கேட்டது. நானும் அக்காவும் குரல் கேட்ட திசையை நோக்கி சுற்றும் முற்றும் பார்த்தோம். அப்பொழுது அங்கே சரிந்து விழுந்த பெரிய ஆலமரம் ஒன்று அழுது கொண்டு இருந்தது. நான் ஆலமரத்துக்கு அருகில் சென்றதும் என்ன ஆச்சரியம்! ஆலமரம் பேசத் தொடங்கியது. எம்மால் நம்ப முடியவில்லை.
என்னை தெரிகின்றதா? நான் தான் ஆலமரம். நீங்கள் பாடசாலை விட்டு வரும்பொழுது எனது நிழலில்இளைப்பாறி விட்டு செல்வீர்களே! இப்பொழுது நான் நேற்றுப் பெய்த மழையால் ,கடும் காற்றாலும் நான் அடியோடு கீழே கிடக்கின்றேன். என்று கூறி அழத் தொடங்கியது. நானும் அக்காவும் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தோம். ஆலமரம் தனது அழுகையை நிறுத்திவிட்டு மீண்டும் கதைக்க தொடங்கியது.
நான் 500 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையானவன். எனது தோற்றத்தை பார்க்கும் பொழுது பார்ப்பவர்களுக்கு கம்பீரமாக காட்சியளித்தேன். பரத்த உடலும், கிளைகள் பல பரப்பி குறிப்பிட்ட தேசத்தை நான் பிடித்துக் கொண்டு காணப்பட்டேன். எனில் பல விழுதுகளும் தொங்கி காணப்பட்டன. நான் எத்தனையோ மழை, புயல் என்பவற்றை கடந்து நிலைத்து நின்றேன்.

சரிந்து விழுந்த ஆலமரத்தின் சுயசரிதை
என் மீது பலவகையான பறவைகள் வந்து கூடுகளைக் கட்டி தமது இனப்பெருக்கத்தை உருவாக்குகின்றன. மேலும் இப்பறவைகள் தமது வாழ்விடமாகவும் என்னை பயன்படுத்தினார்கள். உணவு தேடுவதற்கு மட்டும் வெளியில் சென்று விட்டு மீதி நேரம் என்னுடனேயே இருப்பார்கள். எனக்கு இப் பறவைகளோடு இருக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பறவைகள் உடைய சத்தங்களை கேட்கும் பொழுது எனது மனம் மிகவும் புத்துணர்ச்சி உடையதாக காணப்படும்.
அது மட்டுமின்றி வீதியால் செல்லும் வழிப்போக்கர்கள் அதிக வெயில் காரணமாக களைத்துப் போய் காணப்படுவார்கள். அவர்கள் என்னைக் கண்டதும் எனது நிழலில் இளைப்பாறுவார்கள். தமது களைப்பு தீரும் வரை படுத்து உறங்கி விட்டு தான் கொண்டு வந்த உணவுகளை உண்பார்கள். பின்னர் தாம் வந்த காரியங்களுக்கு செல்வார்கள். எப்பவும் என்னைச் சுற்றி பல பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். அது எனக்கு சந்தோஷத்தை தரும்.
மேலும் உங்களைப் போன்ற பாடசாலை சிறுவர்கள் பாடசாலை விட்டு வரும் பொழுது அல்லது மாலை நேரங்களில் விளையாட வரும் பொழுது என்னில் தொங்குகின்ற விழுதுகளில் ஏறி மகிழ்ச்சியாக தொங்கி விளையாடுவார்கள். அது மட்டுமன்றி என்னில் காய்த்து தொங்குகின்ற சிறிய பழங்களை எடுத்து ஏனைய சிறுவர்களுக்குஎறிந்து விளையாடுவார்கள்.
நான் இச்சிறுவர்களின் சுட்டித்தனங்களையும் குறும்புகளையும் ரசித்த வண்ணம் இருப்பேன். நான் அவர்களுக்கு மழை, வெயில் படாதவாறு பாதுகாத்தேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன்.
மாலை நேரங்களில் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் நான் இருக்கும் இடத்திற்கு வந்து ஒன்று கூடி இருப்பார்கள். எல்லோரும் சேர்ந்து பழைய கதைகள், புராணங்கள் என்பவற்றை பற்றி கதைத்துக் கொண்டிருப்பார்கள். எனக்கும் கதைகள், புராணங்கள் பற்றி கேட்பதென்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர்கள் வரும்வரை அவர்களுக்காக காத்திருப்பேன்.
அவர்கள் வந்ததும் அவர்களின் கதைகளை கேட்பதற்காக மிகவும் சந்தோசமாக காத்திருப்பேன். அவர்கள் கூறும் கதைகளை கேட்கும் பொழுது எனக்கு மன நிம்மதியை ஏற்படுத்துகின்றது. மேலும் அவர்கள் கூறும் நல்ல அறிவுரைகள் மிகவும் பிடிக்கும் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் இந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
நான் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவனாக இருப்பதால் எனக்கு இந்த ஊரில் நடந்த நன்மைகள், தீமைகள் அனைத்தையும் நான் அறிவேன். இதனால் இந்த ஊரின் முக்கியத்துவத்தை பற்றியும் நான் அறிந்ததால் எனக்கு இந்த ஊரில் இருப்பதற்கு மிகவும் பிடிக்கும். அதனால் நான் இந்த ஊரில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் நேற்று பெய்த மழையோடு நான் அடியோடு சரிந்து விட்டேன். இதனால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது.
மேலும் என்னை சுற்றி எப்பொழுதும் வயோதிபர்கள் சிறுவர்கள் பறவைகள், மிருகங்கள், பெண்கள், ஆண்கள் என பல்வேறு பட்டவர்கள் எப்போதும் என்னைச் சுற்றி காணப்படுவார்கள். இதனால் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவே காணப்படும். ஆனால் இன்று நான் சரிந்து கிடக்கும் பொழுது என்னில் கூடு கட்டி இருந்த பறவைகள் என்னை தனியாக விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.
மிருகங்களும் என்னை தேடி வந்துவிட்டு நான் இருக்கும் நிலையை பார்த்துவிட்டு என்னை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் என்னை பார்த்து கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் என்னை பார்த்துவிட்டு என்னை அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர்.
சிலர் எனது கிளைகளை வெட்டிச் செல்கின்றனர். கிளைகளை வெட்டும் பொழுது எனது உடல் மிகவும் வலிக்கின்றது. இதை உணராத மனிதர்கள் என்னை கூரிய ஆயுதத்தால் வெட்டி எடுக்கின்றனர். இத்துன்பங்களைத் தாங்க முடியாத நான் அழுது கொண்டே இருக்கின்றேன். எனது அழுகுரலைக் கேட்டு எனக்கு யாரும் உதவுவதற்கு வரவில்லை.
இந்த ஊருக்கு 500 வருடங்களுக்கு மேலாக நான் செய்த நன்மைகளை இந்த ஊர் மக்களும் பறவைகள் மற்றும் மிருகங்களும் மறந்து விட்டார்கள். இதை நினைக்கும் பொழுது எனக்கு வேதனை அளிக்கின்றது. என்று கூறியபடி விக்கி விக்கி அழத் தொடங்கியது. ஆலமரம் கூறிய கதையைக் கேட்டதும் எனக்கு அக்காவுக்கும் அழுகையை அடக்க முடியாமல் போனது. நாங்களும் அந்த இடத்திலேயே அழத் தொடங்கினோம்.
பின்னர் நாம் அந்த ஆலமரத்துக்கு ஆறுதலை கூறிவிட்டு வீட்டுக்கு திரும்பினோம். வீட்டிற்கு செல்லும் வரை அழுது கொண்டே சென்றோம். அழுது கொண்டு வருவதை கண்ட அம்மா பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். என்ன நடந்தது என எங்களிடம் விசாரித்தார். நடந்தவற்றை அம்மாவிடம் கூறினோம். அம்மாவும் மிகவும் கவலை அடைந்தார். பின்னர் அம்மா தனது கவலைகளை மறைத்துக் கொண்டு எங்களைச் சமாதானப்படுத்தினார். நாங்களும் அம்மா கூறிய சமாதானத்தை ஏற்காது மீண்டும் மீண்டும் அழத் தொடங்கினோம்.
