Thursday, April 16, 2026
Homeகல்விகட்டுரைசூழல் மாசடைதலும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் - கட்டுரை

சூழல் மாசடைதலும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் – கட்டுரை

சூழல் மாசடைதல்  இன்றைய நவீன உலகின் மிகப்பெரும் சவால் ஆகும் . இன்றைய எமது உலகானது விஞ்ஞான வளர்ச்சியில் வானுயர்ந்த அளவிற்கு செல்லுகின்றது என்றால் அது மிகையாகாது. இதனால் மனிதனும் அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கின்றான். அவனால் தன்னைச் சுற்றியுள்ள சூழலைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமின்றித் திரிகின்றான். அதி உச்ச விஞ்ஞான வளர்ச்சியினால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் சுற்றுச் சூழல் மாசடைதலில் பல பிரிச்சினைகளை எதிர்நோக்குகின்றன.

சூழலின் முக்கியத்துவம்

சூழலில் உள்ள அனைத்து அம்சங்களையும் அதாவது உயிருள்ள,உயிரற்ற அனைத்தையும் உள்ளடக்கியதே சூழல் எனப்படும்.இயற்கை அம்சங்களான நிலம்,நீர்,காற்று என்பன மிக முக்கியமானதாக இருக்கின்றது. தானாகத் தோன்றிய இயற்கை அம்சங்களான ஆறுகள்,குளங்கள்,கடல்கள்,மலைகள்,நீரோடைகள், மரங்கள் என்பன சூழலுக்கு அழகு சேர்ப்பதோடு சூழலைப் பசுமையாகவும் வைத்திருப்பதற்கு உதவுகின்றது.

முன்னோர்கள் சூழலுடன் இணைந்து வாழ்ந்த விதம்

எமது முன்னோர்களின் தேவைகள் அனைத்தும் இயற்கையோடு சார்ந்தே இருந்தது. இதனால் மரங்களின் இலை ,குழைகளால் வேயப்பட்ட வீடுகளில் வசித்தனர். பழங்கள்,காய்கறிகள்,கிழங்குகளை உண்டனர். இயற்கையோடு சேர்ந்து தமது வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

சூழல் மாசடைதல்

சூழல் மாசடைதலும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் - கட்டுரை
சூழல் மாசடைதலும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் – கட்டுரை

நிலம் மாசடைதல் (Land Pollution)

நிலம் மாசடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்தவகையில் தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்தில் சேர்தல்,அதிகளவு இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்துதல்,பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை நிலத்தில் புதைத்தல்,உக்கலடையாத பொருட்களை மண்ணிணுள்  புதைத்தல், ஆற்றுக் கழிமுகங்களில் மணல் அகழ்தல், கிருமிநாசினிகளைக் கழுவி நிலத்தில்  ஊற்றுவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணிய உயிரினங்கள் இறப்பதால் மண்ணின் வளம் குறைவடைகின்றது. இதனால் நிலம் மாசடைகின்றது. இது போன்ற மனிதனின் பல்வேறு செயற்பாடு காரணமாக நிலம் மாசடைகின்றது.

நீர் மாசடைதல் (Water Pollution)

நீர் மாசடைதல் (Water Pollution)
நீர் மாசடைதல் (Water Pollution)

நீர் மாசடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.அந்தவகையில் தொழிற்சாலைக் கழிவுகளை நீர் நிலைகளில் கலக்க விடுதல்,இறந்த பிராணிகளை நீர்  நிலைக்குள் வீசுதல்,பிராணிகள் கிணற்றுக்குள் எச்சமிடுதல், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்களை நீர் நிலைக்குள் வீசுதல்,வயல்வெளிகளில் கிருமிநாசினி மற்றும் இரசாயனப் பசளைகளை நீர் நிலைகளின் அருகில் கழுவி ஊற்றுவதால் அவை நீருடன் சேர்வதால் நீர் மாசடைகின்றது.வைத்தியசாலைக் கழிவுகளை கடலுடன் கலக்க விடுதல்,குப்பை கூழங்களை நீருக்குள் வீசுதல்,கால்நடைகளை நீர் நிலைகளில் குளிப்பாட்டுதல், மலசலகூடக் கழிவுகள் நீருடன் சேர்தல்,நீர் நிலைக்கு அருகில் மலசலகூடத்தை அமைத்தல்.போன்ற காரணங்களால் நீரானது மாசடைகின்றது.

நீர் மாசடைதல் தினசரி 14,000 உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கழிவு நீர் குடிநீருடன் கலப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரிக்கின்றன.

வளி மாசடைதல் (Air Pollution)

வளி மாசடைவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.அந்தவகையில் இறந்த பிராணிகளை வீதியோரங்களில் வீசுவதால் துர்நாற்றம் வீசுதல்,கிருமி நாசினிகளை விசிறும் போது வளியுடன்  கலத்தல், வெடி பொருட்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகைகள் வளியுடன் கலத்தல், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் வளியுடன் கலத்தல், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகைகள் வளியுடன் கலத்தல். இது போன்ற பல்வேறு காரணங்களினால் வளி மாசடைகின்றது.

சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகளை கவனிக்கும்போது, வளி மாசடைதல் மனிதரை மட்டுமின்றி பல உயிரினங்களையும் அழிவின் பாதைக்கு தள்ளுகிறது.

ஒலி மாசடைதல் (Sound/Noise Pollution)

வெடி பொருட்களிலிருந்து வெளிவரும் அதிக சத்தம்,வாகனங்களிலிருந்து வெளிவரும் அதிக ஒலி,யுத்த காலங்களின் போது ஆயுதங்களிலிருந்து வெளிவரும் அதிக சத்தம் காரணமாக ஒலி மாசடைகின்றது. மேலும் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களிலிருந்து வெளிவரும் அதிக சத்தம் காரணமாகவும் ஒலியானது மாசடைகின்றது.

சூழல் மாசடைவதை தடுக்கும் வழிமுறைகள்

நிலம் மாசடைவதைத் தடுக்கும் வழிமுறைகள்

நிலம் மாசடைவதைத் தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.அந்தவகையில் அதிகளவு இரசாயனப் பதார்த்தங்களைப் பாவிப்பதைக் குறைத்தல்,பொலித்தீன் பாவனையை மீள் சுழற்சிக்கு உட்படுத்துதல், ஆற்றுக் கழிமுகத்தில் மணல் அகழ்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்,பொலித்தீன் பாவனையைத் தடை செய்தல்,இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைக் மேற்கொண்டு நிலம் மாசடைவதைக் குறைக்க வேண்டும்.

நீர் மாசடைவதைத் தவிர்க்கும் வழிமுறைகள்

நீர் மாசடைவதைத் தவிர்ப்பதற்கு தொழிற்சாலைக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுதல்,நீர் நிலைகளில் கிருமிநாசினிகளை நீர் நிலைக்கு அருகில் வைத்துக் கழுவுவதைத் தவிர்த்தல்,இறந்த பிராணிகளை நீர் நிலைக்குள் வீசாது மண்ணிணுள் புதைத்தல்,நீர் நிலைகளில் காலாநடைகளைக் குளிப்பாட்டுவதைத் தவிர்த்தல்.போன்ற காரணங்களினால் நீர் மாசடைவதைத் தவிர்க்கலாம்.

வளி மாசடைவதைத் தவிர்க்கும் வழிமுறைகள்

வளி மாசடைவதைத் தவிர்ப்பதற்கு நச்சு வாயுக்கள் கொண்ட வெடிப் பொருட்களைக் கொளுத்துவதைத் தடை செய்தல், புகை வெளியிடாத வாகனங்கள்/ இலத்திரனியல் வாகனங்களைப் பயன்படுத்துதல்,இரசாயன கிருமிநாசினிகளை விசிறுவதைக் குறைத்து அதற்கு மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்துதல்,பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்குகளை எரிப்பதைத் தடை செய்து அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துதல்,குப்பை கூழங்களை எரிக்காது மண்ணிணுள் புதைத்தல்.போன்ற நடவடிக்கை மூலம் வளி மாசடைவதைத் தடுக்கலாம்.

சூழல் மாசடைவதால் ஏற்படும் தீங்குகள் 

நிலம் மாசடைதல்

  1. மண்ணில் உள்ள நுண்ணிய உயிர்கள் அழிதல்.
  2. மண்ணின் போசணைத்  தன்மை குறைவடைதல்.
  3. தாவரங்களின் வளர்ச்சி குறைவடைதல்.

நீர் மாசடைதல்

  1. வயிற்றோட்டம்
  2. வாந்திபேதி
  3. நெருப்புக் காய்ச்சல்
  4. கடல் வாழ் உயிரினங்கள் அழிதல்

வளி மாசடைதல்

  1. தோல் அழற்சி
  2. தோல் நோய்கள்
  3. சுவாச அழற்சி
  4. சுவாசப்பைக் கோளாறுகள்
  5. தோல்ப் புற்றுநோய்கள்

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் சனத்தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது இதனால் மனிதனின் தேவைகள் அதிகரிக்கின்றது.இதனால் அவன் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக காடுகளை அழிக்கின்றான்.இதனால் சூழல் சமநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.சூழல் அதிக வெப்பத்தை உணருகின்றது. மேலும் சூழல் மாசடைவால் ஓசோன் படைகளில் ஓட்டை ஏற்படுகின்றது.இதனால் புறவூதாக் கதிர்களின் தாக்கம் நேரடியாக எம்மைத் தாக்குகின்றது. இதனால் அமில மழை பெய்தல், புவி பாலைவனமாதலுக்கு உட்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் சூழல் தொடர்பான பொறுப்புகளுக்கென தனியான அம்மைப்பு ஒன்றும் உள்ளது. UNEP – United Nations Environment Programme

ஆகவே நாம் சூழல் மாசடைதலிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமாயின் நிலம்,நீர்,வளி,ஒலி என்பவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை மாசுபடுத்தாது முன்னோர்கள் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தது போல் நாமும் வாழ வேண்டும்.

அடுத்து எமது தேவைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்ததாக இருக்க வேண்டும்.சூழல் பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் பல்கலைக்கழக நிறுவனங்களும் தமது ஆய்வினை நடத்தி அது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள்,பிரசுரங்களின் மூலம் தெளிவுபடுத்துகின்றனர். அதுமட்டுமன்றி சூழல் நேயக் கல்வி என்ற பாடமும் மாணவர்களிடையே கற்பிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும்  யூன் 5ஆம் திகதி உலகம் முழுவதும் சூழல் தினம் ஒவ்வொரு ஆய்வுப்  பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.எனவே நாமும் ஒரு மரம் வெட்டும் போது அதற்குப் பதிலாக பல மரங்களை நட்டு எம்மையும் எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பது எமது கடமையாகும்.சூழலைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினர்களின் ஆரோக்கியத்திற்கு வித்திட்டு நோய் இன்றி வாழ்வோம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments