Friday, April 17, 2026
Homeகல்விகட்டுரைமுதியோர்களை மதிப்போம், பேணுவோம் - உலக முதியோர் தினம் கட்டுரை

முதியோர்களை மதிப்போம், பேணுவோம் – உலக முதியோர் தினம் கட்டுரை

“முதியோர் எமது நாட்டின் முதுகெலும்பு” என்ற கூற்றுக்கிணங்க நாம் முதியவர்களை பாதுகாப்பது எமது கடமை ஆகும் . முதியோர் தினம் வருடத்தின் ஒவ்வொரு அக்டோபர் மாதம் முதலாம் திகதி அன்று  கொண்டாடப்படுகின்றது. வீட்டுக்காக உழைத்த முதியவர்களை கொண்டாடுவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

முதியவர்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை காலத்தில் பல்வேறுபட்ட இடர்களை சந்தித்து அவற்றை தமது  அனுபவமாக மாற்றி தனது வாழ்க்கையை திறம்பட கொண்டு நடாத்தியவர்களே முதியவர்கள் ஆவார்கள். இவர்களின் அனுபவம் எமது வாழ்க்கையை சிறப்பாக வழி நடத்திச் செல்வதற்கு உதவுகின்றது.

முதியோர்களை மதிப்போம், பேணுவோம் - உலக முதியோர் நாள் கட்டுரை
முதியோர்களை மதிப்போம், பேணுவோம் – உலக முதியோர் நாள் கட்டுரை

இந்த சர்வதேச முதியோர் தினத்தில், வயதானவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் கண்ணியத்தை மதிக்கும் பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த உறுதி ஏற்போம். – UN Secretary-General António Guterres

சில இடங்களில் முதியவர்கள் தனது குடும்பத்தோடு வாழ்கின்றனர் . சிலர் குடும்பத்தில் இருந்து விலக்கி வைப்பதால் தனியாக வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு தனிமையாக வாழும் முதியவர்கள் தமது கடைசி காலத்தில் தமது தேவைகளை நிறைவேற்ற முடியாது பிறரின் உதவியை நாடி நிற்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சிலர் தமது வீட்டில் உள்ள முதியவர்களை பார்ப்பதற்கு நேரமில்லை என்பதால் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவல நிலை ஏற்படுகின்றது . இதனால் முதியவர்கள் மிகவும் மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .

இன்றைய சிறுவர்கள் முதியவர்கள் கூறும் நல்ல விடயங்களை செவிமடுத்து நடந்து கொள்வதற்கு விரும்புவதில்லை . தம்மை சிறு வயது முதல் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெற்றோர்களை கடைசி காலத்தில் பார்ப்பதற்கு மறுக்கின்றனர்.

அவர்கள் பெற்றோர்களிடமிருந்து வாங்க வேண்டிய சொத்துக்கள், பணங்கள் என்பவற்றை பெற்றவுடன் அவர்களை அனாதையாக அல்லது தெருவோரங்களில் விட்டுவிட்டு செல்கின்றனர் . அவர்கள் தமது வயது முதிர்ந்த காலத்தில் நிம்மதியாக இருப்பதை விட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் அலைந்து திரியும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

முதியோர்களை மதிப்போம், பேணுவோம் - உலக முதியோர் நாள் கட்டுரை
முதியோர்களை மதிப்போம், பேணுவோம் – உலக முதியோர் நாள் கட்டுரை

முதியவர்களும் குழந்தைகளும் ஒன்று என்று கூறுவார்கள் . அதாவது குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கும் பெற்றோர்கள் கைதட்டி மகிழ்கின்றனர் . ஆனால் வீட்டில் இருக்கும் முதியவர்கள் தம்மை அறியாமல் செய்யும் குறும்புகளையும் சுட்டித்தனங்களையும் வீட்டில் இருப்பவர்கள் மதிக்காது, அவர்களை ஏசுவதும், வீட்டிலிருந்து ஒதுக்கி வைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள் .

இதனால் முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள் . இதனாலே ஐக்கிய நாடுகள் சபை முதியோர்களின் கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஆம் தேதி முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகின்றது .

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு சட்டத்தின் நோக்கங்கள்

  • முதியவர்களுக்கான உணவு, உடை, தங்குவதற்கு ஏற்ற இடங்கள் என்பவற்றை பெற்றுக் கொடுத்தல் .
  • முதியவர்களுக்கான சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுத்தல் .
  • முதியோர்களின் கருத்துக்களுக்கு அரசாங்க செவி சாய்த்து மதிப்பு கொடுத்தல் வேண்டும் .
  • முதியோர்களுக்கு உரிய பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்கி அவர்களை பாதுகாத்தல் .
  • முதியவர்கள் வாழ்வதற்குரிய நல்ல சூழலை உருவாக்கு அவர்களுக்குரிய சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துதல்.

வீட்டுக்காகவும் நாட்டுக்காகவும் ஓடி ஓடி உழைத்த முதியவர்களை தற்போது குடும்பத்தோடு சேர்த்து பார்க்காத நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக குடும்பத்தின் வறுமை காணப்படுகின்றது . குடும்பத்திற்கு போதிய அளவு வருமானம் காணப்படாததால் வீட்டில் இருக்கும் முதியவர்களை தெருவோரங்களில் விட்டுவிட்டு செல்கின்ற நிலை ஏற்படுகின்றது அதாவது முதியவர்களை பராமரிப்பதற்கு அதிக செலவினங்கள் ஏற்படுகின்றது என்ற எண்ணமே காரணம் இதனால் முதியவர்கள் தெருவோரங்களில் யாசகம் கேட்டு இருக்கும் நிலையும் ஏற்படுகின்றது . இதைவிட எழுபது, எண்பது வயதுகளில் வீடுகளில் நிம்மதியாக இருக்க வேண்டியவர்கள் சொந்தமாக தொழில் செய்து தம்மை பார்த்துக் கொள்கின்ற நிலையும் ஏற்படுகின்றது .

பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகள் எந்தவொரு கஷ்டத்தையும் படக்கூடாது என்று பார்த்து பார்த்து பிள்ளைகளை வளர்ப்பவர்களே பெற்றோர்கள் ஆவர் . தாம் படிக்கவில்லை என்றாலும் தனது பிள்ளை படிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தேவையான கல்வியை வழங்கியவர்கள் . மேலும் அவர்கள் தம்மை வருத்தி உழைத்த பணத்தினை தமது பிள்ளைகளின் சந்தோஷத்திற்காக செலவழித்தவர்கள் என்று கூறுவது மிகையாகாது .

ஏனெனில் தம்மை வயது முதிர்ந்த காலத்தில் தம்முடைய பிள்ளைகள் தம்மை பார்க்க வேண்டும் என்ற ஆசையே காரணம் . ஆனால் பிள்ளைகள் நன்றாக படித்து முடித்ததும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறும் பொழுது சந்தோசமாக பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றனர் .

பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தனியாக வாழ்கின்ற நிலை ஏற்படுகின்றது . தனது அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் . தாம் இறந்த பின் தமது பிள்ளைகள் தான் கொல்லி வைக்க வேண்டும் என்ற கடைசி ஆசை கூட நிறைவேறாது பணத்திற்கு ஆட்களைப் பிடித்து கொல்லி வைக்கின்ற அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர் . தான் பெற்ற பிள்ளைகளாலேயே புறக்கணிக்கப்படும் பொழுது மனதளவில் மிகவும் பாதிப்படைகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • நாம் கல்வி அறிவு மற்றும் பொருளாதாரத்தை பெற்றிருந்தாலும் அதனை நல்வழியில் பயன்படுத்துவதற்கு எமக்கு போதிய அளவு அனுபவம் இருப்பதில்லை . இதன்போது எம்மை வழிநடத்துவதற்கு முதியவர்களின் அனுபவம் தேவை .
  • வீட்டில் முதியவர்கள் இருப்பதால் சிறிய குழந்தைகள் முதியவர்களோடு இருப்பதற்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்வதற்கும் முடிகின்றது .
  • பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் சிறு பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முதியவர்களின் பங்கு பெரிதும் உதவுகின்றது .
  • தாத்தா பாட்டியுடன் வாழுகின்ற சிறு பிள்ளைகள் வாழ்க்கைக்கு உதவுகின்ற பல நீதிக் கதைகளை கேட்டு நடந்து கொள்கின்றனர் .
  • வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவுகளை எடுக்கும் பொழுது முதியவர்களின் அனுபவம் ஆசீர்வாதமும் கிடைப்பதனால் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு உதவுகின்றது .
  • முதியவர்களுடன் இருக்கும் பிள்ளைகள் பிறரை மறுக்கவும் பிறரின் கருத்துக்களை செவி சாய்க்கக்கூடிய பிள்ளைகளாக உருவாகின்றனர் .
  • சிறு பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல பிள்ளைகளாக உருவாகுவதற்கு சமூகத்தினால் மதிக்கப்படுகின்ற பிள்ளைகளாக மாறுவதற்கு முதியவர்களின் பங்கு பெரிதும் உதவுகின்றது .

குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறும் இந்த உலகத்தில் முதியவர்களையும் நாம் குழந்தைகளாகவே பார்க்க வேண்டும் . அவர்களுக்குரிய தேவைகளை நாம் பார்த்து செய்வதோடு முதன்மை காலத்தில் அவர்களை நிம்மதியாக வீட்டில் இருப்பதற்கு வழி வகுத்து கொடுத்தல் வேண்டும் . குழந்தை பருவத்தை போன்று முதுமைப் பருவமும் போற்றப்படக்கூடிய ஒன்றாக இருக்கின்றது .

எனவே இளம் சமுதாயத்தினர் ஆன நாம் வீட்டில் உள்ள முதியவர்களை அரவணைத்து அவர்களுக்குரிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து அவர்களின் குறும்புத்தனங்களை ஏற்று அவர்களின் கடைசி காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்தல் வேண்டும் . முதியவர்களே எமது நாட்டின் சொத்துக்களாகும் .அவர்களை பாதுகாப்பது எமது கடமை ஆகும்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments